Sunday, March 2, 2014

தெலங்கானா மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. | (கோப்புப் படம்)தெலங்கானா தனி மாநிலம் அமைக்கும், ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதா- 2014க்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டார்.

முன்னதாக, மத்திய அரசு ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதாவை தயாரித்து ஆந்திர சட்டசபைக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அந்த மசோதாவை சட்ட சபை நிராகரித்து திருப்பி அனுப்பி விட்டபோதிலும், தெலங்கானா தனி மாநிலம் அமைக்கும் மசோதா, கடும் எதிர்ப்புகளையும் மீறி நாடாளுமன்றத்தில் கடந்த 20-ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஆரம்பம் முதலே மாநில பிரிவினையை எதிர்த்து வந்த முதல்வர் கிரண்குமார் ரெட்டி, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினார்.
இத்தகைய சூழலில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தெலங்கானா மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மத்திய அரசு அனுப்பி வைத்தது.
இந்நிலையில், தெலங்கானா தனி மாநிலம் அமைக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்.