Monday, March 3, 2014

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் ஆப்கானிஸ்தானுக்கு இடம்

வங்கதேசத்தை வீழ்த்திய ஆப்கானிய கிரிக்கெட் அணியினர்ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகத் தர வரிசையில் இடம்பெறும் தகுதியை ஆப்கானிஸ்தான் அணி புதிதாகப் பெற்றுள்ளது.

ஆசியக் கோப்பை போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு சில ஆண்டுகள் முன்பே வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி - சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையான ஐசிசியின் தர வரிசையில் 12ஆவது இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
பதினோராவது இடத்தில் அயர்லாந்து அணியும், அதற்கு முன்னால் டெஸ்ட் பந்தயங்களில் விளையாடும் தகுதி கொண்ட பத்து நாடுகளும் இந்த தர வரிசையில் இடம்பெற்றுள்ளன.
வங்கதேசத்துக்கு எதிராக பெற்ற வெற்றிதான் டெஸ்ட் விளையாடும் நாடொன்றுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெறுகின்ற முதல் ஒரு நாள் வெற்றி ஆகும்.
ஒன்றாம் தேதியன்று ஃபதுல்லா நகரில் நடந்த ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியிருந்தது.
சர்வதேச தர வரிசையில் ஒரு அணி புதிதாக இடம்பெற வேண்டுமானால், ஐசிசியின் முழு உறுப்பு நாடுகளிடம் விளையாடிய விதத்தில் இரண்டு வெற்றிகளையாவது ஒரு அணி பெற்றிருக்க வேண்டும்; இல்லாவிட்டால் முழு உறுப்பு நாடுகளிடம் விளையாடியதில் ஒரு வெற்றியும், தான் மொத்தம் விளையாடிய ஆட்டங்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வெற்றிகளையும் பெற்றிருக்க வேண்டும் என ஐசிசி விதிகள் கூறுகின்றன.
ஆகஸ்ட் 2010ல் ஒரு நாள் கிரிக்கெட் விளையாடத் துவங்கிய ஆப்கானிஸ்தான், தற்போது வங்கதேசத்தை வீழ்த்தியதோடு இதுவரை ஆடிய 12 ஆட்டங்களில் 60 சதவீத வெற்றிகளையும் பெற்றுள்ளதால் அதற்கு தற்போது தரவரிசையில் இடம் கிடைத்துள்ளது.
2015ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்குபெறவும் அண்மையில்தான் ஆப்கானிஸ்தான் அணி தகுதிபெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.